بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
فَهَزَمُوهُم بِإِذۡنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ وَٱلۡحِكۡمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّفَسَدَتِ ٱلۡأَرۡضُ وَلَٰكِنَّ ٱللَّهَ ذُو فَضۡلٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ
ஆக, அல்லாஹ்வின் அனுமதியினால் (தாலூத்தின் படையினர்) அவர்களைத் தோற்கடித்தார்கள். தாவூது, ஜாலூத்தை கொன்றார். இன்னும், அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். இன்னும், அவன் தான் நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். அல்லாஹ் - மக்களை அவர்களில் (உள்ள நல்லோர்) சிலரின் மூலம் (பாவம் செய்த) சிலரை (தண்டனையிலிருந்து) - பாதுகாக்க வில்லையென்றால் இப்பூமி அழிந்திருக்கும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான்.
تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۚ وَإِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
இவை, அல்லாஹ்வுடைய (கண்ணியமான குர்ஆன்) வசனங்களாகும். இவற்றை உமக்கு உண்மையுடன் நாம் ஓதிக் காண்பிக்கிறோம். இன்னும் நிச்சயமாக நீர் (நாம் அனுப்பிய) தூதர்களில் உள்ளவர்தான்.
۞تِلۡكَ ٱلرُّسُلُ فَضَّلۡنَا بَعۡضَهُمۡ عَلَىٰ بَعۡضٖۘ مِّنۡهُم مَّن كَلَّمَ ٱللَّهُۖ وَرَفَعَ بَعۡضَهُمۡ دَرَجَٰتٖۚ وَءَاتَيۡنَا عِيسَى ٱبۡنَ مَرۡيَمَ ٱلۡبَيِّنَٰتِ وَأَيَّدۡنَٰهُ بِرُوحِ ٱلۡقُدُسِۗ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلَ ٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِم مِّنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَٰتُ وَلَٰكِنِ ٱخۡتَلَفُواْ فَمِنۡهُم مَّنۡ ءَامَنَ وَمِنۡهُم مَّن كَفَرَۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا ٱقۡتَتَلُواْ وَلَٰكِنَّ ٱللَّهَ يَفۡعَلُ مَا يُرِيدُ
அத்தூதர்கள் - அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் எவருடன் பேசினானோ அ(த்தகைய)வரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், (ஜிப்ரீல் என்ற) பரிசுத்த ஆத்மாவின் மூலம் அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள் கொள்கையில்) கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஆக, அவர்களில் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டவரும் உண்டு. இன்னும், அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்) சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَنفِقُواْ مِمَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا بَيۡعٞ فِيهِ وَلَا خُلَّةٞ وَلَا شَفَٰعَةٞۗ وَٱلۡكَٰفِرُونَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
நம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது. (மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡحَيُّ ٱلۡقَيُّومُۚ لَا تَأۡخُذُهُۥ سِنَةٞ وَلَا نَوۡمٞۚ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ مَن ذَا ٱلَّذِي يَشۡفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذۡنِهِۦۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡۖ وَلَا يُحِيطُونَ بِشَيۡءٖ مِّنۡ عِلۡمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۖ وَلَا يَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ
அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் நிகழாது. (-அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது.) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (எல்லாக் காலத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் - பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான்.
لَآ إِكۡرَاهَ فِي ٱلدِّينِۖ قَد تَّبَيَّنَ ٱلرُّشۡدُ مِنَ ٱلۡغَيِّۚ فَمَن يَكۡفُرۡ بِٱلطَّـٰغُوتِ وَيُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும் மிகத் தெளிவாகிவிட்டன.) ஆக, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார். அறவே, அ(ந்)த (வளையத்தி)ற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّـٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவன் அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும், நிராகரிப்பவர்களோ அவர்களின் உதவியாளர்கள் ஷைத்தான்கள் ஆவார்கள். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் (எல்லோரும்) நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّـٰلِمِينَ
(நபியே!) இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விஷயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் (திமிரில் அவன் இப்படி தர்க்கித்தான்). “என் இறைவன், உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான்’’ என்று இப்ராஹீம் கூறியபோது, அவனோ “நானும் உயிர்ப்பிப்பேன். இன்னும் மரணிக்கச் செய்வேன்’’ என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். ஆக, நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா.’’ ஆக, (அதற்கு பதில் சொல்ல முடியாமல்) நிராகரித்த(அ)வன் வாயடைத்துப்போனான். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்.
أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார்.
وَإِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّ أَرِنِي كَيۡفَ تُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ قَالَ أَوَلَمۡ تُؤۡمِنۖ قَالَ بَلَىٰ وَلَٰكِن لِّيَطۡمَئِنَّ قَلۡبِيۖ قَالَ فَخُذۡ أَرۡبَعَةٗ مِّنَ ٱلطَّيۡرِ فَصُرۡهُنَّ إِلَيۡكَ ثُمَّ ٱجۡعَلۡ عَلَىٰ كُلِّ جَبَلٖ مِّنۡهُنَّ جُزۡءٗا ثُمَّ ٱدۡعُهُنَّ يَأۡتِينَكَ سَعۡيٗاۚ وَٱعۡلَمۡ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
இன்னும், இப்ராஹீம் “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(இப்ராஹீமே!) நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ எனக் கூறினான். (அல்லாஹ்வே!) அவ்வாறில்லை. “(நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) எனினும், எனது உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காண்பிக்கும்படி உன்னிடம் வேண்டுகிறேன்)’’ எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம்முடன் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி உம்மை சுற்றி உள்ள மலைகளில்) ஒவ்வொரு மலையின் மீதும் அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஆக்குவீராக! பிறகு, அவற்றை அழைப்பீராக! அவை (உயிர் பெற்று) உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!” என்று (அல்லாஹ்) கூறினான்.