بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حُنَفَآءَ لِلَّهِ غَيۡرَ مُشۡرِكِينَ بِهِۦۚ وَمَن يُشۡرِكۡ بِٱللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ ٱلسَّمَآءِ فَتَخۡطَفُهُ ٱلطَّيۡرُ أَوۡ تَهۡوِي بِهِ ٱلرِّيحُ فِي مَكَانٖ سَحِيقٖ
அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக, அவனுக்கு (எதையும்) இணையாக்காதவர்களாக இருங்கள். இன்னும், எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்து, (அவர் இறந்த) பிறகு பறவைகள் அவரை கொத்தி தின்றதைப் போன்று; அல்லது, காற்று அவரை தூரமான இடத்தில் வீசி எறிந்ததைப் போன்று ஆவார்.
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَـٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ
இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும்.
لَكُمۡ فِيهَا مَنَٰفِعُ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى ثُمَّ مَحِلُّهَآ إِلَى ٱلۡبَيۡتِ ٱلۡعَتِيقِ
(அல்லாஹ்வின் புனித அடையாளங்கள், குர்பானி பிராணிகள் ஆகிய) இவற்றில் குறிப்பிட்ட ஒரு காலம்வரை உங்களுக்கு பலன்கள் உள்ளன. பின்னர் அவற்றை அறுப்பதற்குரிய (ஹலாலான) இடம் அல் பைத்துல் அதீக் (-புனித எல்லை) ஆகும்.
وَلِكُلِّ أُمَّةٖ جَعَلۡنَا مَنسَكٗا لِّيَذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلۡأَنۡعَٰمِۗ فَإِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَلَهُۥٓ أَسۡلِمُواْۗ وَبَشِّرِ ٱلۡمُخۡبِتِينَ
(உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிராணியை (அல்லாஹ்விற்காக அறுத்து) பலியிடுவதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகள் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூர்வதற்காக (கால் நடைகளை பலியிடுவதை ஏற்படுத்தினோம்). ஆக, நீங்கள் வணங்க வேண்டிய கடவுள், ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, அவனுக்கே பணிந்து விடுங்கள். இன்னும், (நபியே! அல்லாஹ்விற்கு) பயந்து பணிந்து கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتۡ قُلُوبُهُمۡ وَٱلصَّـٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمۡ وَٱلۡمُقِيمِي ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ
(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயத்தால் நடுங்கும். இன்னும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் மீது பொறுமையாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَـٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
கொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம்.
لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ
அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். இவ்வாறுதான், அவன் அவற்றை (அந்த குர்பானி பிராணிகளை) உங்களுக்கு பணிய வைத்தான், அல்லாஹ்வை - அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக - நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக. இன்னும், (நபியே!) அல்லாஹ்விற்கு அழகிய முறையில் கீழ்ப்படிபவர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!
۞إِنَّ ٱللَّهَ يُدَٰفِعُ عَنِ ٱلَّذِينَ ءَامَنُوٓاْۗ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٖ كَفُورٍ
நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கை கொண்டவர்களை (பாதுகாத்து, அவர்களை) விட்டும் (நிராகரிப்பாளர்களை) தடுத்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லா மோசடிக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் நேசிக்க மாட்டான்.
أُذِنَ لِلَّذِينَ يُقَٰتَلُونَ بِأَنَّهُمۡ ظُلِمُواْۚ وَإِنَّ ٱللَّهَ عَلَىٰ نَصۡرِهِمۡ لَقَدِيرٌ
சண்டையிடப்படுபவர்களுக்கு - நிச்சயமாக அவர்கள் அநீதியிழைக்கப்பட்டார்கள் என்பதற்காக - (தங்களிடம் சண்டை செய்பவர்களை எதிர்த்து போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்.
ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِم بِغَيۡرِ حَقٍّ إِلَّآ أَن يَقُولُواْ رَبُّنَا ٱللَّهُۗ وَلَوۡلَا دَفۡعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعۡضَهُم بِبَعۡضٖ لَّهُدِّمَتۡ صَوَٰمِعُ وَبِيَعٞ وَصَلَوَٰتٞ وَمَسَٰجِدُ يُذۡكَرُ فِيهَا ٱسۡمُ ٱللَّهِ كَثِيرٗاۗ وَلَيَنصُرَنَّ ٱللَّهُ مَن يَنصُرُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ
அவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எவ்வித நியாய(மான காரண)மின்றி வெளியேற்றப்பட்டார்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் என்று அவர்கள் கூறியதற்காகவே தவிர (வேறு எதற்காகவும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை). மக்களை - அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் பாதுகாப்பது இல்லை என்றால் துறவிகளின் தங்குமிடங்களும் கிறித்தவ ஆலயங்களும் யூத ஆலயங்களும் அதிகமாக அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் உடைக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக எவர் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) உதவுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்.