بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قَالُواْ سَنُرَٰوِدُ عَنۡهُ أَبَاهُ وَإِنَّا لَفَٰعِلُونَ
“நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை வலியுறுத்தி கேட்போம். இன்னும், நிச்சயமாக நாங்கள் (நீர் கூறியதை) செய்து முடிப்போம்” என்று (யூஸுஃபின் சகோதரர்கள்) கூறினார்கள்.
وَقَالَ لِفِتۡيَٰنِهِ ٱجۡعَلُواْ بِضَٰعَتَهُمۡ فِي رِحَالِهِمۡ لَعَلَّهُمۡ يَعۡرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمۡ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
மேலும், (யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பி சென்றால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும்” என்று கூறினார்.
فَلَمَّا رَجَعُوٓاْ إِلَىٰٓ أَبِيهِمۡ قَالُواْ يَـٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلۡكَيۡلُ فَأَرۡسِلۡ مَعَنَآ أَخَانَا نَكۡتَلۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ
ஆக, அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது, “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட அதிகமான உணவு) அளவை எங்களுக்கு (கொடுக்கப்படாமல்) தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (அதிக தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்” என்று கூறினார்கள்.
قَالَ هَلۡ ءَامَنُكُمۡ عَلَيۡهِ إِلَّا كَمَآ أَمِنتُكُمۡ عَلَىٰٓ أَخِيهِ مِن قَبۡلُ فَٱللَّهُ خَيۡرٌ حَٰفِظٗاۖ وَهُوَ أَرۡحَمُ ٱلرَّـٰحِمِينَ
(யஅகூப்) கூறினார்: “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போன்றே தவிர இவர் விஷயத்தில் நான் உங்களை நம்ப முடியுமா? ஆக, அல்லாஹ்வே மிக மேலான பாதுகாவலன். இன்னும், அவனே அருள் புரிபவர்களில் மிக அதிகம் அருள் புரிபவன்.”
وَلَمَّا فَتَحُواْ مَتَٰعَهُمۡ وَجَدُواْ بِضَٰعَتَهُمۡ رُدَّتۡ إِلَيۡهِمۡۖ قَالُواْ يَـٰٓأَبَانَا مَا نَبۡغِيۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتۡ إِلَيۡنَاۖ وَنَمِيرُ أَهۡلَنَا وَنَحۡفَظُ أَخَانَا وَنَزۡدَادُ كَيۡلَ بَعِيرٖۖ ذَٰلِكَ كَيۡلٞ يَسِيرٞ
மேலும், அவர்கள் தங்கள் மூட்டையை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு, “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (உணவும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். இன்னும், எங்கள் சகோதரனையும் பாதுகாப்பாக அழைத்து (சென்று, பாதுகாப்பாக அழைத்து) வருவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக வாங்கிவருவோம். இது (அதிபருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினார்கள்.
قَالَ لَنۡ أُرۡسِلَهُۥ مَعَكُمۡ حَتَّىٰ تُؤۡتُونِ مَوۡثِقٗا مِّنَ ٱللَّهِ لَتَأۡتُنَّنِي بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمۡۖ فَلَمَّآ ءَاتَوۡهُ مَوۡثِقَهُمۡ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ
(யஅகூப்) கூறினார்: “உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர, நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமொழியை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் நான் அனுப்பவே மாட்டேன்” என்று (யஅகூப்) கூறினார். அவர்கள், (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமொழியை கொடுக்கவே, “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் ஆவான்” என்று (யஅகூப்) கூறினார்.
وَقَالَ يَٰبَنِيَّ لَا تَدۡخُلُواْ مِنۢ بَابٖ وَٰحِدٖ وَٱدۡخُلُواْ مِنۡ أَبۡوَٰبٖ مُّتَفَرِّقَةٖۖ وَمَآ أُغۡنِي عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍۖ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ عَلَيۡهِ تَوَكَّلۡتُۖ وَعَلَيۡهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُتَوَكِّلُونَ
இன்னும், அவர் கூறினார்: “என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும்போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (யாருக்கும்) இல்லை. இன்னும், நான் அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். ஆக, நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்திரு)க்கவும்.”
وَلَمَّا دَخَلُواْ مِنۡ حَيۡثُ أَمَرَهُمۡ أَبُوهُم مَّا كَانَ يُغۡنِي عَنۡهُم مِّنَ ٱللَّهِ مِن شَيۡءٍ إِلَّا حَاجَةٗ فِي نَفۡسِ يَعۡقُوبَ قَضَىٰهَاۚ وَإِنَّهُۥ لَذُو عِلۡمٖ لِّمَا عَلَّمۡنَٰهُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
அவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் (எகிப்து நகரத்தில்) நுழைந்தபோது, அது யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அவர்களை விட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் அது தடுப்பதாக இல்லை. மேலும், நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கல்வி கற்பித்திருந்த காரணத்தால் அறிவு ஞானம் உடையவராக இருந்தார். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
وَلَمَّا دَخَلُواْ عَلَىٰ يُوسُفَ ءَاوَىٰٓ إِلَيۡهِ أَخَاهُۖ قَالَ إِنِّيٓ أَنَا۠ أَخُوكَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
மேலும், அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (-தன்னுடன் அணைத்து)க் கொண்டார். இன்னும், “நிச்சயமாக நான்தான் உனது சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி கவலை படாதே! (சங்கடப் படாதே!)” என்று கூறினார்.
فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمۡ جَعَلَ ٱلسِّقَايَةَ فِي رَحۡلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا ٱلۡعِيرُ إِنَّكُمۡ لَسَٰرِقُونَ
ஆக, அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தி கொடுத்தபோது தன் சகோதரனின் சுமையில் (அளப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற) குவளையை வைத்து விட்டார். பிறகு, ஓர் அறிவிப்பாளர் “ஓ! (தானிய) சுமைகளை ஏற்றி செல்லும் பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார்.